×

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: ‘அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் இன்று வரவழையுங்கள்’

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் இன்று வேலைக்கு வரவழைக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்தி கம்பிகள் அறுந்து விழவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசிய பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களை தவிர இந்த மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்றும் (5ம் தேதி) பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாக தேவைப்படும் பணியாளர்களை மட்டும் வரவழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: ‘அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் இன்று வரவழையுங்கள்’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Cyclone Mikjam ,Tiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்